தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன் தான்: முரளிதரன் குற்றச்சாட்டு
வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு,கேவில்,சுண்டிக்குளம் வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்தது தான் பிழை என சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை அச்சப்படுத்துகின்றார்கள்.
கருத்தரங்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தேசிய பூங்கா தொடர்பில் மக்களுடன் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கில் சுமந்திரன் அபிவிருத்தி எங்களுக்கு வேண்டும்.தேசிய பூங்கா கட்டாயம் எங்களுக்கு தேவை என்னும் கருத்தை முன்வைத்திருந்தார். அப்போது அந்தக் கருத்தரங்கில் இருந்த நான் உட்பட ஒரு சிலர் சுமந்திரனின் கருத்தை கடுமையாக எதிர்த்தோம்.

தேசிய பூங்காக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்பதனை கூறும்போது சுமந்திரன் அதுபற்றி சிந்திக்கவில்லை. இன்று யானைகளை கொண்டு வந்து எமது பகுதிக்குள் விட்டு தேசிய பூங்காவென கூறி எமது மக்களை தமது காணிகளை விட்டு விரட்டியடிக்க பார்க்கின்றார்கள்.
தமிழரசுக் கட்சி
அன்று தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்திருந்தால் இன்று இந்த நிலை மக்களுக்கு வந்திருக்காது. அப்போதைய காலத்தில் இந்த வர்த்தமானியை நீக்குவதாக கூறினார்கள். அவர்களிடம் பெரும்பாண்மை இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை.

ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பாண்மை இருக்கின்றது. தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியை அவர்களால் நீக்க முடியும் பெரும்பாண்மையை கொண்டு நீக்குவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.