நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
ஏப்ரல் மாதத்திற்கான இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் எமக்குக் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முக்கியமாக இவை எதுவும் போர் நடைபெறும் பிராந்தியங்களிலிருந்து ஏற்றப்படுபவை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன், வரும் நாட்களில் மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எதிர்வரும் மாத நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தை எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்க முடியும்.
92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாத ஆரம்பம் வரை பாதுகாப்பாக உள்ளது. தற்போது இரண்டு கப்பல்கள் தரையிறக்கப்படுகின்றன.
27ஆம் திகதி வந்த கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோலும், 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெட்ரோலும் கொண்டுவரப்பட்டுள்ளன. நாளை வரும் IOC கப்பலில் தலா 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் வருகின்றன.

சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய்
28, 29ஆம் திகதிகளில் வரவிருந்த 37,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் முன்னதாகவே வந்து தற்போது தரையிறக்கி முடிக்கப்பட்டுள்ளது. எமக்கு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் பெறுவதில்தான் சிக்கல் இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தே எமக்குத் தேவையான அதிகப்படியான டீசல் மற்றும் எரி எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.
எரி எண்ணெய் கிடைக்காவிடில் மின்சாரத் தடைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதால், அதற்கான ஏலங்களைக் கோரியுள்ளோம். அதன்படி, ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் திகதிகளுக்கு இடையில் 32,000 மெட்ரிக் தொன் டீசலும், 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் வரவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.