தமிழ் - முஸ்லிம் தரப்பிற்கு சுமந்திரனின் அறிவுரை
எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் நேற்று(16.09.2025) மாலை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 25ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களும் நெருடல்களும் தொடர்ந்தும் நிலவி வருகிற காலத்தில் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தடவையாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெரும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.
அடிப்படைக் காரணங்கள்
புட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் நீத்துப் பெட்டி அல்ல, (குழல் புட்டு) எமது சமூகங்களின் உறவு என்றுமில்லாதவாறு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையால், அந்த தலைப்பிலேயே இந்த நினைவுப் பேருரையை ஆற்றலாம் என்று எண்ணினேன். அதுவே பெருந் தலைவர் அஷ்ரபுக்குச் செய்யும் உயரிய அஞ்சலியாகவும் கருதுகிறேன்.
தமிழ் - முஸ்லிம் உறவு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் உயிர் வாயு (oxygen) போன்றது. முழு நாட்டின் சூழ்நிலைக்கும் இது பொருத்தமானது. என்றாலும், அதன் வெற்றியோ, தோல்வியோ கிழக்கிலே, அதுவும் அம்பாறை மாவட்டத்திலேயே நிச்சயப்படுத்தப்படும் என்பதை பெருந்தலைவர் அஷ்ரப் நன்கு அறிந்திருந்தார்.
தமிழ் பேசுகிற முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். ஆனால், அதே சமயத்தில் தமிழ் மக்களோடு பின்னிப்பிணைந்த ஓர் அடையாளத்தையே அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு.
ஒன்று, தாய்மொழி என்கிற ஆழமான அடையாளம் தமிழ் பொதுவுடமை என்ற கவிதையிலே மாரட்டின் லூதர் கிங் ஐப் போல கனவொன்று கண்டேன் என்று ஆரம்பித்து எழுதிய கவிதையிலே அஷ்ரப் இதை எவ்வளவுக்கு அழுத்திக் கூறியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
அது மட்டுமல்ல, தான் ஒரேயொரு ஆங்கிலக் கவிதை எழுதியதாகவும் ஆனால், சமூகத்துடன் எனது தாய் மொழியான தமிழில் தொடர்பு கொள்வது எனக்குப் பெரும் நிம்மதியைத் தருகிறது என்றும் எழுதியிருக்கிறார்.
அரசியல் கண்ணாடியூடாகப் பார்த்தாலும் உலகெங்கும் மொழி என்பதே அரசியல் ஆட்புலங்களை நிர்ணயம் செய்கிறது என்பது புலப்படும். உலக வரைபடத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகளை அவதானித்தால் இது தெளிவாகத் தெரியும். ஐரோப்பா இதற்கு நல்ல உதாரணம். தாய்மொழி அடிப்படையிலேயே சகல நாடுகளும் பிரிந்திருக்கின்றன. தனித்தனி நாடுகளாகப் பிரியாவிட்டாலும் சுவிட்ஸர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சமஷ்டி அலகுகள் மொழி அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை
எமது அண்டை நாடான இந்தியாவிலும் மொழிவாரியான மாநிலங்கள் (linguistic states) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அலகுகள் அமைந்துள்ளன. இதற்கான காரணத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சமுக வாழ்விற்கு மொழி இன்றியமையாதது. ஒரு மொழி இல்லாமல் ஓர் அரசியல் அலகாக இயங்க முடியாது.
மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி சம்பாஷித்து கலந்துரையாடி தங்களைத் தாங்களே ஆள்வதையே ஜனநாயகம் என்கிறோம். இதைச் செய்வதற்கு மொழி இன்றியமையாதது. மொழிபெயர்ப்போடு செய்யப்படும் கலந்துரையாடலையும் ஒரே மொழியில் நிகழும் சம்பாஷனையையும் ஒப்பிட முடியாது.
அதுவும் ஆட்சி அதிகார விடயங்களில் மொழிபெயர்ப்பில் தங்கியிருப்பது ஆபத்தில் கூட முடியலாம். இலங்கை நாட்டில் இரண்டு தாய்மொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆகவே, அரசியல் அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்தப் பிரதான பிரிவு முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாவது தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ் – முஸ்லிம் என்ற இரு சமுகங்களைச் சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள்.
அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படியாக நாம் சேர்ந்து இயங்கும்போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










