வடக்கு மக்களது ஆணை தொடர்பில் கொக்கரிக்கும் ஆட்சியாளர்! சுமந்திரன் சாடல்
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்(Vavuniya) தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் இன்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பிற்போடப்பட்ட தேர்தல். முன்னர் நடந்திருக்க வேண்டிய தேர்தல் காலம் தாழ்த்தி தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்தல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் அப்பொழுது நாட்டில் இருந்த சூழ்நிலை சற்று வித்தியாசமானதாக இருந்திருக்க கூடும்.
ஆனால் தற்போது இந்த தேர்தல் நடைபெறும் சூழ் நிலையில் எங்களுக்கான சவால்கள் அதிகமாக இருக்கின்றன. புதிய சவால்களை எப்படி எதிர் நோக்குவது என்று யோசித்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருக்கிறது.
பொதுவாக இந்த நாட்டை குட்டிச் சுவர்களாகியது நீண்டகாலம் இருந்த கட்சிகள் என அங்கலாய்த்து, அடிப்படையான மாற்றம் தேவை என்று தான் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் நிலையில் முன் எப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு இந்த மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். எவரிடமும் நம்பிக்கை வைத்து கொண்டு வந்தார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் முன்பு இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்தமையால் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக தங்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. தமது உடனடித் தேவைகளை தீர்க்கின்ற அளவில் செயற்படுகின்றோமா எனபது பற்றி மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது.
நாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும்.
தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி. அதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை. அதை செய்கின்ற அதேவேளை, மக்களுக்கு நாளாந்த பிரச்சனைகள் பல உள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நாளாந்த பிரச்சனைகளை சந்திக்கக் கூடியதான அதிகாரங்கள்.
ஆகையினால், தான் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை அறிந்து அதை நாம் செயற்படுத்துகின்ற போது, மக்களுடைய நாளாந்த பிரச்சனைகளை தீர்க்கின்ற வகையில் அதிகாரங்கள் எமது கைகளில் வருகின்ற போது அதை திறம்பட செயலாற்றுபவர்கள் நாங்கள் என்பதை மக்களுக்கு காண்பிக்க முடியும்.
அதை இவர்கள் செய்வார்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |