ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவைத் தயாரிக்கிறார் சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பில் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வரைவினை தயாரிக்கும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதனை பிரதான எதிர்க்கட்சி முன்வைக்கவுள்ளது. இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாத பிரேரணைக்கான வரைவினைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்குமாறு அவர்கள் (எதிரணியினர்) என்னைக் கோரினார்கள்.
இதனையடுத்து அப்பணியைப் பெறுப்பெடுத்து முன்னெடுத்து வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாயாரிப்பதற்கு முன்னதாக காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துபவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தேன்.
அதன்போது அவர்களிடத்தில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையொன்றை தயாரித்து வைத்திருந்தார்கள். அதனை என்னிடத்தில் ஒப்படைத்திருந்தார்கள்.
தற்போதைய சூழலில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை கொண்டுவருவதும் நிறைவேற்றுவதும் நடைமுறையில் சிக்கல்களை கொண்டிருப்பதால் அதில் உள்ள முக்கிய சில விடயங்களை உள்வாங்கி ஜனாதிபதிக்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவைத் தயாரிக்கவுள்ளேன் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரேரணையால் என்ன பயன்? இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையால் எவ்விதமான நிலைமைகள் ஏற்படும் என்று வினவியபோது, பதிலளித்த சுமந்திரன்,
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையால் ஆழமான நிலைமைகள் எவையும் ஏற்படாத போதும் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டியவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்றம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத பிரேரணையை நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது நாடாளுமன்றம் ஜனாதிபதி மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தும் என்றார்.



