நாங்கள் கடும்போக்காளர்கள் அல்ல: எம்.ஏ.சுமந்திரன் (Photos)
நாங்கள் கடும்போக்காளர்கள் அல்ல சர்வதேச சாசனங்களின் அடிப்படையில் ஒரு மக்கள் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையினையே கேட்கின்றோமே தவிர வேறு எதனையும் கேட்கவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசையினை ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் ஒரு அரசியல் தீர்வு வரும் போது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள் சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் நேற்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
தொடர்ச்சியாக போராடி வருகின்ற இனம்
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 75ஆண்டுகள் பூர்த்தியானது மட்டுமல்ல சரித்திரம் வாய்ந்த நிகழ்வு எண்ணிக்கையில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்களிடம் ஆட்சிப்பொறுப்பினை கொடுத்து மற்றவர்களை அவர்களுக்கு கீழ் அடிமையாக வாழுவதற்காக அவர்களுக்கு எழுதிக் கொடுத்த நாளின் 75வது நிறைவுநாள்.
அன்றிலிருந்து இன்றுவரையில் அந்த அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக வாழவேண்டும் என்று தொடர்ச்சியாக போராடி வருகின்ற இனம் தமிழினமாகும்.
ஒரு எஜமானிடமிருந்து இன்னுமொரு எஜமானிடம் நாங்கள் கையளிக்கப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவு இன்றாகும். இந்த நாட்டில் அன்னியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக அனைத்து இன தலைவர்களும் ஒன்றாக இணைந்து போராடினார்கள்.
ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு இன மக்களிடமே சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தினை அனுபவிக்கும் உரிமையுண்டு என்று கூறிய போதிலும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் பிரித்தானியரால் அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பினை வழங்கி விட்டுச் சென்றார்கள்.
தமிழரசுக்கட்சி தனிக்கட்சி
அவர்களிடம் அந்த ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதுடன், அவர்கள் செய்த முதல் விடயம் மலையக மக்களின் பிரஜாவுரிமையினை இடைநிறுத்தினார்கள். நாடற்றவர்களாக ஆக்கினார்கள்.
அந்த படிப்பினையைக் கொண்டு தான் அந்த ஒற்றையாட்சி முறைமையின் கீழ் எங்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முன்னரை விட மிக மோசமான அடிமைத்தனமாக நடாத்தப்படுவோம் என்பதை தீர்க்கதரிசனமாக கூறி தமிழ் காங்கிரசிலிருந்து தந்தை செல்வா வெளியேறினார்.
1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி தனிக்கட்சியாக மலர்ந்தது. ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்பவர்களுக்கு தந்தை செல்வாவின் செயற்பாடு ஒரு பாடமாகயிருக்க வேண்டும்.
அவர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டை யாரும் விமர்சிக்கவில்லை. புகழ்ந்து பேசினார்கள்.
அன்றைக்கு சமஸ்டியை இகழ்ந்தவர்கள் சமஸ்டியை பழித்தவர்கள், இன்றைக்கு தாங்கள் தான் சமஸ்டிக்கு உண்மையானவர்கள், தாங்கள்தான் சமஸ்டிக்காக போராடியர்கள் என்று சொல்லுமளவுக்கு சமஸ்டியை கட்டுப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள், எங்கள் மீது சுட்டுவிரலை நீட்டுகின்றார்கள்.
சமஸ்டி எமது அரசியல் சித்தாந்தம்
சமஸ்டியானது எங்களது கோசம். அது எங்களது அரசியல் சித்தாந்தம். நீங்கள் அதனை பழித்தவர்கள், அதனை எதிர்த்தவர்கள். உங்களுக்கு சமஸ்டி என்ற வார்த்தையை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது.
இன்று தமிழரசுக்கட்சி தனித்து நிற்பதை பலர் விமர்சிக்கின்றனர், விபரம் தெரியாமல் விமர்சிக்கின்றனர். நாங்கள் ஒற்றுமைக்கு மாறானவர்கள் அல்ல. நாங்கள் ஏனைய கட்சிகளுடனும் மக்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுபவர்கள்.
இணைந்து பயணிக்க முடியாது
படகிலும் வீணையிலும் வருபவர்களின் இலட்சியங்களுடன் நாங்கள் இணைந்து பயணிக்க முடியாது. ஒற்றுமையென்ற போர்வையில் எங்கள் அடித்தளத்தை, உயிர்மூச்சை விட்டுவிட முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக 20வருடங்கள் நாங்கள் ஒன்றாக பயணித்தோம். இன்றைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்கின்றோம், சேர்ந்தே பயணிப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை எவர் பாவித்தாலும் பரவாயில்லை. உள்ளாந்த ஒற்றுமையே எங்களுக்கு தேவையானது. வெறும் பெயர்ப்பலகையிலிருக்கும் ஒற்றுமையில்லை. உண்மையான இலக்கை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் எங்களுடன் கைகோர்த்து நில்லுங்கள்.
அகிம்சை வழியில் தொடர்ந்து போராடுவோம்
ஒவ்வொருவருக்கும் சரித்திரம் உண்டு அதனை திரும்பி பாருங்கள். மக்கள் மூடர்கள் அல்ல. நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்ற அறிவிப்பினை இன்று வழங்கியுள்ளோம்.
அந்த போராட்டத்தின் அடையாளம் அகிம்சைவழியென்பதை உலகுக்கு உரத்துச் சொல்லவே இந்த காந்திகுல்லா தொப்பியை அணிந்திருக்கின்றோம். அகிம்சை வழியில் தொடர்ந்து போராடுவோம்.
எங்களை நசுக்கிவிட முடியாது. நாங்கள் இந்த நாட்டில்தான் வாழுவோம், இந்த நாட்டினையே ஆளுவோம். சர்வதேசத்திற்கும் ஒரு முக்கிய செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.
எந்தவிதத்திலாவது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசையினை ஏற்றுக் கொள்ளுகின்ற வகையில் ஒரு அரசியல் தீர்வு வரும் போது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
நாங்கள் கடும்போக்காளர்கள் அல்ல. சர்வதேச சாசனங்களின் அடிப்படையில் ஒரு மக்கள் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையினையே கேட்கின்றோமே தவிர வேறு எதனையும்கேட்கவில்லை.நாங்கள் சொல்லுகின்ற ஆட்சிமுறை வருமாகயிருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம்.
தமிழர்களின் பிரச்சினை
வவுனியாவில் வைத்து ஜனாதிபதிவர்கள் சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர்களின்
பிரச்சினையை தீர்ப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த போது அதற்கு உதவுவோம் என்று
நாங்கள் கூறினோம்.
இன்றைக்கும் நாங்கள் தாயராகவேயிருக்கின்றோம். ஒரு சமஸ்டி கட்டமைப்புடனான உச்சபட்ச அதிகாரப்பகிர்வு முறைமையினை வடகிழக்கில் ஏற்படுத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை கொடுக்கப்படாத ஒவ்வொரு கனமும் நாங்கள் போராடுவோம்.
இன்றைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற ஐந்து படிமுறைகளை நாங்கள் எழுத்தில் வழங்கியுள்ளோம்.
கடைசி கூட்டம் வரையில் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் சக்கர நாற்காலியில் கூட்டங்களுக்கு வந்தார்.
நாங்கள் காந்தி குல்லாவினை அணிந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் சொல்லுகின்ற செய்தி அறவழியில், அமைதிவழியில், அகிம்சை வழியில் நாங்கள் முன்னெடுக்கின்ற போராட்டத்துடன் நாட்டுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
கொழும்பில் கரிநாளாக போராட்டங்கள்
மருதானை பகுதியில் சுதந்திர தினத்திற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர்களும் பொலிஸாரும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அந்த போராட்டத்தினை நடாத்தியர்கள் சிங்கள மக்களாகும்.
75வருடங்களாக தமிழினத்திற்கு சுதந்திரமில்லையென்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களும் தங்களுக்கும் சுதந்திரமில்லையென்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று சிங்கள மக்களுக்கும் புரிய ஆரம்பித்துள்ளது. இன்று கொழும்பிலும் கரிநாளாக போராட்டங்கள் நடக்கின்றது. 75வது சுதந்திர தினத்தை பெரியளவில் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி திட்டமிடுகின்ற போது சிங்கள மக்களே கொழும்பில் பெரியளவில் கறுப்பு போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.
இந்த நாட்டில் சுதந்திரம் கிடைக்காத அனைவரையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். எங்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னெடுக்கும் அறவழிபோராட்டத்தில் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.
எங்களோடு இணைந்து பயணியுங்கள்
என்று தமிழரசுக்கட்சி இன்று மட்டக்களப்பிலிருந்து இந்த அழைப்பினை
விடுக்கின்றது. தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் விடுதலை கிடைக்கும்போது சிங்கள
மக்களுக்கும் பூரண விடுதலை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.