மட்டக்களப்பில் புத்தர் சிலையை காணவில்லை: பொலிஸாருடன் சுமனரதன தேரர் வாக்குவாதம் (Video)
விகாரைக்கு செல்ல வேண்டும் என்றும், புத்தர் சிலையை பார்க்க வேண்டும் என தெரிவித்தும் அம்பிட்டிய சுமனரதன தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில் தேரர், விகாரைக்கு செல்ல வேண்டும் என தான் நான் உங்களிடம் கேட்டேன். என்னை விகாரைக்கு போகவிடாமல் தடுக்கும் பொலிஸ்காரரே நான் அணிந்திருப்பது காவி என குறிப்பிட்டார்.
அனுமதி மறுக்கும் பொலிஸார்
இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், நாங்களும் காவி உடையை மதிக்கின்றோம் என கூறினார்.
அப்படியாயின் ஏன் என்னை விகாரைக்கு செல்ல அனுமதிக்க மாட்டீர்கள்? என தேரர் கேள்வியெழுப்பிய நிலையில் அங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் என பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிடுகிறார்.
எனினும் சாணக்கியனுக்கு பயந்து ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய இராணுவத்தினர் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் எந்த இடத்திற்கும் செல்ல தமக்கு பொலிஸார் அனுமதி மறுப்பதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் திபுல பெத்தான எனும் இடத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தலைமையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிநடத்தலில் கடந்த 16.10.2023 அன்று இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே வைக்கப்பட்ட சிலை தற்போது அங்கு இல்லை எனவும், அது உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துமே தேரர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.