ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாபெரும் நிதி மோசடி-வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் சுகீஸ்வர பண்டார!
கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உண்மையான காரணங்களை எவரும் சொல்லவில்லை.
அவரை போதை பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் பிரிவே கைது செய்துள்ளது. அவருக்கு எதிராக பல கோடி ரூபா பணமோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக 2022 ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார். அவர் 2 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் இப்பதவியில் இருந்துள்ளார்.
இதற்காக அவர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 60 இலட்சத்து 51 ஆயிரத்து 790 ரூபாயைப் (ரூ. 6,051,790) பெற்றுள்ளார்.
பதவி இரத்தாகியும் பல கோடி ரூபா சம்பளம்
அதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும், 2022 ஜூலை 14 முதல் 2024 பெப்ரவரி 21 வரை 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாயை அவர் பெற்றுள்ளார்.
அதாவது, கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய பின்னரும் அவருக்கான ஊதியப் பணத்தைப் பெற்றுள்ளார். பொதுவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் விதிகளின்படி, ஒரு பிரத்தியேக செயலாளர் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளராகவே கருதப்படுவார்.
அவர்களின் சம்பளம் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்படும். அவர்கள் நிரந்தர அரச ஊழியர்கள் அல்லர். ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும்போது அல்லது பதவியைத் துறக்கும்போது அந்த நியமனம் தானாகவே இரத்தாகிவிடும். அவ்வாறு நியமனம் இரத்தான பின்னரும், அதாவது கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், 2022 ஜூலை முதல் 2024 பெப்ரவரி 21 வரை அவர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக குறித்த 19 இலட்சத்திற்கும் அதிமான தொகையைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், ரணில் விக்ரமசிங்க காலத்தில் அவருக்கு விசேட திட்ட பணிப்பாளர் (Director of Special Projects) பதவி வழங்கப்படுகிறது. குறித்த பதவியை 2022 ஜூலை 25 முதல் 2024 செப்டம்பர் 22 வரை வகித்துள்ளார்.
மேலும், அவர் விசேட திட்ட பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி,முன்னர் குறிப்பிட்ட 19 லட்சம் ரூபாய்க்கு மேலதிகமாக, தனியாக மற்றுமொரு சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெற்றுள்ளார். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்கள் பெறப்பட்டுள்ளன.
ரணிலின் காலத்தில் நடைபெற்ற மோசடி
இதற்கு மேலதிகமாக, விசேட திட்டங்களுக்காக அவருக்கு நெருக்கமான குழுவி உட்பட 137 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த 137 பேருக்காக 17 கோடியே 69 லட்சத்து 26 ஆயிரத்து 607 ரூபாய் (ரூ. 176,926,607) அரச பணம் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் Audi ரக சொகுசு வாகனம் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அதன் பராமரிப்புச் செலவுகளுக்காக 59 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. அவருக்கு என தனியான வாகனத் தொகுதி (Vehicle Yard) ஒன்று இருந்துள்ளதுடன், அங்கு 16 வாகனங்கள் வரை இருந்துள்ளன.
இந்த வாகனங்களுக்காக வாரத்திற்கு 65,000 ரூபாய் மற்றும் 256,000 ரூபாய் பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள் பெறப்பட்டுள்ளன.

அவ்வாறு பெறப்பட்ட 1 கோடியே 86 லட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள், அரச கடமைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன என்பதற்கான எந்தவொரு சான்றோ அல்லது உறுதிப்படுத்தலோ இல்லை.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், அவர் 8 சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரச விதிகளின்படி முறையான அறிவித்தல்களையோ அல்லது விடுமுறை அனுமதியையோ பெறவில்லை.
அவர் வெளிநாடுகளில் இருந்த காலப்பகுதியிலும் முழுமையான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இந்த அனைத்து மோசடிகள் ஊடாக சுமார் 24 கோடி ரூபாய் வரையிலான அரச பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மிகக் கடுமையான அரச நிதி துஷ்பிரயோகம் எனக் கருதப்படுகிறது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan