மாற்றுடை கூட வழங்கப்படாத வெடுக்குநாறிமலை விவகார சந்தேகநபர்கள்..! சுகாஷ் காட்டம்
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாற்றுடை வழங்குவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலய வழக்கில், காயமடைந்த சந்தேகநபர்களை நேற்றைய தினமே (09.03.2024) உடனடியாகச் சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்துமாறு நீதிமன்றால் கட்டளையிடப்பட்டிருந்தது.
தொடர் அழுத்தங்கள்
ஆனால், அவ்வாறு செய்யாது இன்று காலையே அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களைப் பார்வையிட்ட சட்டவைத்திய அதிகாரி, காயமடைந்த சந்தேகநபர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார்.
எனினும், அதையும் மீறி மீளவும் சந்தேகநபர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வழங்கப்பட்ட தொடர் அழுத்தங்களை அடுத்து தற்சமயம் மீளவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்களுக்கு இன்றுவரை மாற்றுடை வழங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. சட்டங்கள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |