சீனியின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் குறித்து எச்சரிக்கை
இலங்கையில் சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான மொத்த சீனியில் சுமார் 63 சதவீதமானவை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், உள்நாட்டில் சீனியின் விலை கணிசமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனி விலை
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் எல்-நினோ (El Nino) காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதிக்கு இந்தியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. இலங்கையின் மாதாந்த சீனி நுகர்வுத் தேவை தோராயமாக 60,000 மெட்ரிக் தொன் ஆகும்.

பெலவத்த மற்றும் செவனகல ஆகிய சர்க்கரை ஆலைகள் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது (சிவப்பு சீனி) மொத்தத் தேவையில் 10 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிகளவான சீனியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதுடன் அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராச்சியம், பிரேசில், போலந்து போன்ற நாடுகளிலிடமிருந்து இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரூபாயின் மதிப்பு
மாற்றுச் சந்தைகள் ஊடாக சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா சுத்திகரிக்கப்பட்ட சீனி (Refined Sugar) ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை. எனவே, அதன் விலை சற்று உயர்வாக இருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் சிக்கல் இல்லை. மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 80,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைக்குத் தேவையான சீனி கையிருப்பில் உள்ள போதிலும், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைதல் மற்றும் ஏனைய செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri