ரிஷி சுனக்கின் அமைச்சரவையின் பெண் அமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
ரிஷி சுனக்கின் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் மீண்டும் இங்கிலாந்து உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய இந்நியமனத்திற்காக பல தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா, அரசாங்க விதிகளை மீறியதற்காக பதவி விலகலை அறிவித்திருந்தார்.
பதவி விலகலுக்கான காரணம்
அவரது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அதிகாரபூர்வ ஆவணத்தை சக எம்.பி.க்கு தவறாக அனுப்பியது என கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர் லிஸ் டிரஸ் நிர்வாகத்திலிருந்து விலகினார்.
இதேவேளை, சுனக் புதிய பிரதமரான சில மணிநேரங்களுக்குப்பின், அவர் சுயெல்லா பிராவர்மேன் மீண்டும் அமைச்சரவையில் கொண்டு வந்திருக்கிறார்.
ரிஷி மீதான குற்றச்சாட்டு
இது தொடர்பில் யவெட் கூப்பர் கூறுகையில், "அரசாங்க விதிகளை மீறியமைக்காக உள்துறை செயலாளர் ஒரு வாரத்திற்கு முன்பே பதவி விலகல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
மேலும் விதி மீறல் குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. மேலும் ரிஷி சுனக் அவரை மீண்டும் பதவியில் நியமித்திருக்கிறார்.“என கூறியுள்ளார்.
இதேவேளை “ஐந்து மணி நேரத்திற்கு முன்பு அவர் ஆற்றிய கன்னியுரையில் ‘ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை’என எதனடிப்படையில் உறுதியளித்தார்”என தொழிலாளர் கட்சியின் எம்.பி.சாடியிருக்கிறார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் லூகாஸ், புதிய பிரதமரான ரிஷி சுனக் சுயெல்லா பிரேவர்மேனை நியமித்ததற்காக அவரைக் குற்றம் சாட்டியுள்ளார்.