திடீரென அறைக்குள் ஏற்பட்ட தீ:தந்தை மரணம்:சிகிச்சை பெற்று வந்த தாயும் மரணம்
ஹோமாகமை மாகம்மானவில் வீட்டின் அறையில் ஏற்பட்ட தீயில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான தாயும் உயிரிழப்பு
இரண்டாம் இணைப்பு
ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தில் இரண்டு மாடி வீடு ஒன்றின் கீழ் மாடியில் உள்ள அறையில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தாய், 19 மற்றும் 6 வயதான மகள் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயதான காவிந்தி ரணசிங்க என யுவதியும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக வைத்தியசாலையின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தில் ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தில் வசித்து வந்த மின் தொழிற்நுட்ப நிபுணரோன எஸ்.ஏ.லசந்த புத்திக ரணசிங் மற்றும் அவரது மனைவியான நாலிகா தேவி என்ற பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடியில் உள்ள அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹாத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான எஸ்.ஏ.லசந்த புத்திக ரணசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது 38 வயதான மனைவி, 19, 6 வயதான புதல்விகளுடன் கீழ் மாடியில் உள்ள அறைக்குள் இருந்த போது நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது.
சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் 19 வயதான மகள் ஆகியோர் படுகாயமடடைந்துள்ளதுடன் 6 வயதான மகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தீ விபத்து ஏற்படும் போது, உயிரிழந்தவரின் தாய் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்துள்ளனர். அவர்களுடன் இருந்த 19 வயதான மகள் தலைவாருவதற்காக அறைக்குள் வந்துள்ளார்.
தாயும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரதேசவாசிகள் இணைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் காயமடைந்தவர்களை ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்கு ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 6 வயதான சிறுமி பொரள்ளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயும் 19 வயதான மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 47 வயதான நபர் உயிரிழந்துள்ளார் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.