துறைமுக அதிகாரசபை உறுப்பினர்கள் மீது விசாரணை: இராஜாங்க அமைச்சர் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொண்ட ஆய்வு விஜயத்தை சட்டவிரோதமாக காணொளி பதிவு செய்த துறைமுக அதிகாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கோரியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தளத்துக்கு சென்று அதற்கான பணிகளை பார்வையிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வு
இதனையடுத்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாகும். எனினும் சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாங்கள் விருந்து வைத்தோம் என்று கூறி விஜயம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தொழிற்சங்க உறுப்பினர்கள் சட்டவிரோதமாக விஜயத்தை காணொளிப் பதிவு செய்துள்ளனர்.
துறைமுக அதிகாரசபை
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக அதிகாரசபையின் ஒரு சதமும் கூட இந்த விஜயத்திற்காக செலவிடப்படவில்லை எனவும், நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் சகல சட்டதிட்டங்களையும் தாம் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் நாடாளுமன்றக்குழுவொன்று பொதுப் பணத்தைச் செலவிட்டு விருந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |