கிளிநொச்சியில் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் (Video)
சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் குறித்த போராட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள்
மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட காலமாக சீர் செய்யப்படாத நிலையில் குறித்த போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் ஏ9 வீதிவரை சென்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து மீண்டும் தொழிற்பயிற்சி நிறுவனம் வரை சென்று பிரதான வாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நிர்வாகம் சீர் செய்தல், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரியின் கருத்து
நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த பிரச்சினை தொடர்பாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளரும் அதிபருமான ஜி.தர்மநாதன் குறிப்பிடுகையில், சம்மந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய தரப்புடனும், அமைச்சுடனும் பேசியுள்ளதாகவும், சீர் செய்யப்படும்வரை, வீடுகளில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்களிற்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.