வவுனியாவில் உயிரிழந்த மாணவர்கள்: பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் (Photos)
வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டியின்போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18.08.2023) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று (17.08.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த, வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு
குறித்த இரு மாணவர்களின் ஜனசா பட்டாணிச்சூர் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுத்தீன், வலயக் கல்வி திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



