பாடசாலைக்கு பின்னால் மது அருந்திய மாணவர்கள்-கம்பளையில் சம்பவம்
கம்பளை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பின்னால், உள்ள காட்டில் காலை 9 மணியளவில் சாராயம் அருந்தி விட்டு, பீடி புகைத்துக்கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை நகருக்கு வந்து மதுபானத்தை கொள்வனவு செய்த மாணவர்கள்
இந்த மாணவர்கள் இம்முறை உயர் தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. திங்கள் கிழமை பாடசாலை விடுமுறை நாளில் கம்பளை நகருக்கு வந்துள்ள இந்த மாணவர்கள் நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு போத்தல் சாராயத்தை கொள்வனவு செய்துள்ளதுடன் மற்றைய கடையொன்றில் கடலை மற்றும் பீடி ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளனர்.
இதனையடுத்து கம்பளை விகுலுவத்த மைதானத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் சென்று மது அருந்தி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரை மணி நேரத்தில் சாராய போத்தை காலி செய்து விட்டு, பீடி புகைத்து கொண்டிருந்த போதே பொலிஸார், மாணவர்களை கைது செய்துள்ளனர். கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை நாட்களில் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பது குறித்து பெற்றோர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்னாண்டோ பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இம்முறை பரீட்சைக்காக மேலதிக வகுப்பு மற்றும் பாடங்களை படிக்க வேண்டும் எனக்கூறி தமது பிள்ளைகள் வீட்டில் இருந்து வந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
நாட்டில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அனர்த்தம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கடுமையாக எச்சரித்து மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.