பாடசாலைகளை மீண்டும் திறக்க மாணவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை! - ஷமான் ராஜீந்திரஜித்
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஒரு முன்னாயத்த நடவடிக்கையாக இருக்காது என்று குழந்தை மருத்துவர் டாக்டர் ஷமான் ராஜீந்திரஜித் (Shaman Rajindrajith) தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை குழந்தை மருத்துவக் கல்லூரியின் தலைவரும், தொற்று நோய்களுக்கான ஆலோசனைக்குழுவின் உறுப்பினருமான ராஜீந்திரஜித் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கிடைக்கும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தரவுகளின் படி, பாடசாலைகளை மீண்டும் திறக்க அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வெளிநாட்டினர் இந்த முறையைப் பின்பற்றுகின்றார்கள்.எனவே அதே வழியை இலங்கையிலும் பின்பற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆசிரியர்களும், கல்வி ஊழியர்களும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்களும் தடுப்பூசி போடுமாறு சுகாதார அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவது தொடர்பில் இறுதி முடிவு இல்லை. 3 முதல் 11 வயது வரை உள்ளவர்கள் விடயத்திலும் இன்னும் முடிவு இல்லை .
குறித்த வயதினருக்கான தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
