யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்
பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில் தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பயணிகள்
இதனால் பருத்தித்துறையில் உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல் சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.