அமெரிக்காவில் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுடன், இந்தப் போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர்.
இந்நிலையில், இந்தாண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பரிசுத்தொகை விபரம்
வெற்றி பெற்ற ஹரிணி லோகனுக்கு பட்டத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 38 இலட்சத்து 80 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை ஹரிணி லோகன் வென்றுள்ளார்.
பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் நடுவர்கள் குழு அளிக்கும் ஆங்கில வாக்கியத்தின் சரியான உச்சரிப்பை (ஸ்பெல்லிங்) மாணவர்கள் சொல்ல வேண்டும். பல கட்டங்களுக்கு பிறகு இறுதிச்சுற்றில் 2 மாணவர்கள் போட்டியிட்டார்கள்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் (8 -ம் வகுப்பு), இந்திய வம்சாவளி மாணவன் விக்ரம் ராஜு ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இறுதியில் ஒரு நீண்ட வாக்கியத்தின் உச்சரிப்பில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாகக் கூறி பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளதுடன், விக்ரம் ராஜு 15 வார்த்தைகளை கூறி 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.