வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - யுவதியின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்
தென்னிலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் பல் ஒன்றைப் பிடுங்கியதன் பின்னர் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்துள்ளார்
ஹொரண, பொக்குணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதான தெவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி ஹொரண மேதங்கர மகா வித்தியாலய மாணவி ஆவார். அவர் பாடசாலை மட்டத்தில் சிறந்த நடனக் கலைஞராகவும், மாணவர் தலைவியாகவும் விளங்கிய ஒரு திறமையான மாணவியாகும்.
வைத்தியரின் ஆலோசனை
எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வர வேண்டும் என்ற கனவோடு இருந்த தெவ்மி, உயர்தரப் பரீட்சையில் ஒரு பாடத்திற்குத் தோற்றவிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளார்.

திடீரென ஏற்பட்ட பல் வலியால் கடந்த 14 ஆம் திகதி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, வைத்தியரின் ஆலோசனையின் பேரில் ஒரு பல் பிடுங்கப்பட்டது.
அதன் போது அவருக்கு மயக்க நிலை ஏற்பட்டுள்ளது. மயக்கம் குறித்து தந்தை வைத்தியரிடம் வினவிய போது அது சாதாரண மயக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.
வீடு திரும்பிய பின்னர் மாணவிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதுடன், முகம் வீக்கமடைந்ததைக் கண்ட தாய், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நிமோனியா பாதிப்பு
இதன்போது யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மாணவியின் இரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் ஹொரண அரசாங்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையின் போது உடலில் கடுமையான கிருமித்தொற்று பரவியிருந்ததும், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அத்துடன் அவரது மூளையில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்பட்டிருந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
பலமுறை இரத்தம் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் திகதி இரவு தெவ்மி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய விரும்புவதாக தாய் கூறியுள்ளார்.