துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்
பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொழிலாளர் அராஜகம் ஒழிக, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, முகாமைத்துவத்துக்கு எதிரானவன் முறையைக் கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்கள் கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணிந்திருந்தனர்.
சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்,
"பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஓல்டன் தோட்டத்தில் துரையின் வீடு தேடி சென்று கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்துவது, உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.
துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு, எமக்குப் பாதுகாப்பு நிமித்தம் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்குத் தோட்ட அதிகாரிகளும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.
எனவே, எமக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டிக்கின்றோம். நீதி கிடைக்க வேண்டும். இப்பிரச்சினையைச் சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.















கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
