அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்! - அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியா-மெல்போர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் ஹோட்டல் வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனவும்,அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Campaign Against Racism and Fascism சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட Fanoush மற்றும் Imran என்ற அகதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் சுமார் 50 அகதிகள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 12 அகதிகள் தொடர்ந்து தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சுமார்7 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த Ah Don Khan Aukmt எனும் 24 வயது ரோஹிங்கியா அகதி, தற்போது அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஹோட்டலில் இருந்தவாறு போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை விடுத்த அந்த அகதி,சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கர்ளை மறந்து விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.“எனது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி வாழ்க்கையை வேலிகளுக்கு உள்ளேயே கழித்திருக்கிறேன்.
எனக்கு அகதி அந்தஸ்து இருந்தும் என்னை அவுஸ்திரேலியா அரசு சிறைப்படுத்தி சித்ரவதை செய்து வருகிறது. நான் செய்த குற்றம் என்ன?” என அவர் அலைப்பேசி வழியாக பேரணியில் பேசியிருக்கிறார். “இந்த பூமியிலேயே பெரிதும் பாதிக்கப்படக் கூடிய மக்களாக ரோஹிங்கியாக்கள் இருக்கின்றனர்.
நான் நாடற்றவன். எனது நாட்டில் நான் பாதுகாப்பாக இல்லை. இங்கும் பாதுகாப்பு இல்லை. இது ஹோட்டல் அல்ல, சிறைக்கூடம். எனக்கான மனித உரிமைகள் எங்கே? எனக்கான நீதி எங்கே? நான் எப்பொழுது இங்கிருந்து விடுவிக்கப்படுவேன்?” என அவர் வினவியிருக்கின்றார்.
அவுஸ்திரேலியா ஹோட்டல்களிலும் இன்னும் பிற தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களை மறந்து விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர்,“எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். நீங்களே எங்களுக்கு நம்பிக்கையையும், பலத்தையும் வழங்குகிறீர்கள் என தெரிவித்திருக்கின்றார்.