மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கான போராட்டக்காரர்கள் மீதான வழக்கு: ஊடகவியலாளருக்கு பிடியாணை
மட்டக்களப்பு (Batticaloa) - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது, ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த நபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.
தொடரப்பட்ட வழக்கு
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சென்ற போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சரீர பிணை
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நாடாளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லையென நீதவானின் கவனத்திற்கு சட்டத்தரணியால் கொண்டுவரப்பட்டது.
இதேபோன்று ஏற்கனவே நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன், வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் ஊடகவியலாளர் சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், இன்றைய நீதமன்றில் முன்னிலையான 27பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையை ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கின் விசாரணைக்காக எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |