மியான்மரில் இராணுவ புரட்சிக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்! இணைய சேவை முடக்கம்
மியான்மரில் இராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரில் நடந்த பொதுத்தேர்தலில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய இராணுவம், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், இராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணைக்குள் அதனை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும்> அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன் உச்சகட்டமாக அண்மையில் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்தது.
அத்துடன், அடுத்த ஒரு வருடத்துக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், போராட்டங்கள் வெடிப்பதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இராணுவ புரட்சியை கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியை விடுவிக்க வலியுறுத்தியும் யாங்கோனில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்ததால் பதற்றம் உருவானது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இராணுவத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பிற்பகலில் கலைந்து சென்றனர். இதனால் போராட்டத்தின் வலு குறையத் தொடங்கியது. எனவே, போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி மக்களுக்கு தொடர்ந்து ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனால் இணையதளம் ஸ்தம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் இணையதளம் முற்றிலும் முடக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்கும்வகையில் இணையதளத்தை இராணுவம் முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.