இலங்கைக்கு கடுமையாக எதிர்ப்பு! முடிவுக்காக காத்திருக்கும் இந்தியா
இலங்கை கடற்பரப்பில் வைத்து கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் மரணம் தொடர்பான விசாரணையின் முடிவுக்கு இந்தியா காத்திருக்கிறது.
கடந்த மாதம் இலங்கை கடற்படை கப்பல் ஒன்று மோதியதைத் தொடர்ந்து நான்கு இந்திய மீனவர்கள் உயிரிழந்தமை குறித்து இந்தியா இலங்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய அவர், தற்போது இந்திய மீனவர்கள் யாரும் இலங்கையின் காவலில் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நான்கு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்தனர். இந்த விடயம் குறித்து நாங்கள் இலங்கைக்கு மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். விசாரணையின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது இலங்கையின் காவலில் இந்திய மீனவர்கள் யாரும் இல்லை. அண்மையில் வரை ஒன்பது பேர் இருந்தனர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
"இப்போதைக்கு, 62 இந்திய படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க முயற்சிக்கிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.