அரசியல் கைதுகளுக்கு தலைமை தாங்கும் விஜேபால! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கைதுகள் அல்லது பொய்யான தடுப்புக்காவல்கள் செய்யப்பட்டால், குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்வோம் என்பதை அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda wijepala) மற்றும் அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களுக்கு நினைவூட்டுகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Uthaya Gammanbila) தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதுகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்கும் நிலையில், தற்போதைய சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கல்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2015 நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி செயற்பட்டது. அக்காலகட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச இரண்டாவதாக கைது செய்யப்பட்டு, 40 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.
அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு, 92 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கம்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கிறார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தான் தற்போது இடம்பெறுகின்றன. கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. நாங்கள் இம்முறை இதற்கு இடமளிக்கப் போவதில்லை.
போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |