அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள வைத்தியர்கள்
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய சங்க அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எவ்வாறாயினும் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
மேலும், அனுராதபுரம் வைத்தியர் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்துதனியார் பேருந்துகளில்வருகை தந்தம்நோயாளர்கள் பெரும் பண நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
செய்தி - தேவந்தன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் வைத்தியர் நேற்று (10) தனது கடமைகள் நிறைவடைந்ததையடுத்து வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட தங்குமிடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவு வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்குமிடத்திற்கு சென்று அவரை பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படுகின்றது.
செய்தி - ஷான்
யாழ் போதனா வைத்தியசாலை
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்துவருகிறது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர ஈடுபட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
செய்தி - தீபன்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் அத்துமீறல் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியாவிலும் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கிண்ணியா தள வைத்தியசாலை, காக்காமுனை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம், நடுவூற்று பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில், நோயாளர்களுக்கான வைத்திய சேவைகள் இன்று இடம் பெறவில்லை எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி - கியாஸ்
வவுனியா
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவம் பதிவாகியிருந்தது.
இதற்கு நீதிகோரி நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (12.03) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி - திலிபன்
மருதங்கேணி
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முறைக்குட்படுத்திய சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தியர் தவறான முறைக்குட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் நித்தியவெட்டை ஆரம்பபிரிவு வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம்(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



