யுக்திய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து கவலை
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீதி என்ற "யுக்திய" போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்து, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் மற்றும் மக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்க, குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறாத வகையில் செயற்படுமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கடுமையான நடவடிக்கை
சட்டத்தை மீறி செயல்படும் எந்த அதிகாரிக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.
கடந்த வெள்ளியன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த நடவடிக்கை குறித்து தீவிர அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளுக்குப் பதிலாக, இலங்கையில் உள்ள அதிகாரிகள் நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு பாதுகாப்பு அடிப்படையிலான பதிலைக் கடைப்பிடிப்பதை அவர் கண்டித்திருந்தார்.
இந்த நடவடிக்கையின் போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை அவர் மேற்கோள் காட்டினார், இதில் அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல், மோசமாக நடத்துதல், சித்திரவதை மற்றும் பொது இடங்களில் ஆடைகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும் என்பதையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |