போர் கால மாற்றங்கள் : ஹோர்முஸ் வழியாக 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து
உலக நாடுகளுக்குத் தேவையான மசகு எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் அதன் விநியோகச் சங்கிலி எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த விரிவான தகவல்களை உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ளது.
தற்போதைய ஈரான் போர்ச் சூழலில், உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளே முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளன.
20 சதவீத எண்ணெய் போக்குவரத்து
குறிப்பாக, அமெரிக்கா தனது 'ஷேல் ஆயில்' (Shale oil) தொழில்நுட்பம் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில், ஒபெக் (OPEC) அமைப்பில் உள்ள நாடுகள் ஒட்டுமொத்த உலகத் தேவையில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன.

இந்த அறிக்கையில் மசகு எண்ணெய் கடத்தப்படும் முக்கிய கடல் வழிப்பாதைகள் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரசீக வளைகுடாவில் உள்ள 'ஹோர்முஸ் நீரிணை' வழியாகவே உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது.

தற்போது நிலவும் போர் காரணமாக இந்தப் பாதை முடங்கியுள்ளதால், ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெரும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
மசகு எண்ணெய் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், நாடுகள் தங்களது இறக்குமதியை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை மட்டும் நம்பியிருக்காமல், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு விநியோகத்தை பல்வகைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.