ஹோர்முஸ் நீரிணை: பொருளாதாரத்தை விட இராணுவக் கட்டுப்பாட்டிற்கே ஈரான் முன்னுரிமை
ஹோர்முஸ் நீரிணையை ஓமானுடன் இணைந்து கூட்டாக நிர்வகிப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது.
இது ஈரானின் நிதிச் சலுகைகளை விட, இராணுவ மற்றும் மூலோபாயக் கட்டுப்பாட்டை அடைவதையே தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் சாஷா புரூக்மேன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் (IISS) பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வாளரான சாஷா புரூக்மேன் அல் ஜசீராவிடம் பேசுகையில், ஈரானின் கோரிக்கைகள் காலப்போக்கில் மாறினாலும், அதன் இறுதி இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
சட்ட விதி
ஆரம்பத்தில் சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக நுழைவுக் கட்டணம் கோரிய ஈரான், பின்னர் சேவைக்கட்டணம் என்றும், தற்போது தன்னார்வக் கட்டணம் என்றும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
இருப்பினும், இந்த நெரிசல்மிக்க கடல் வழியில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதே ஈரானின் முக்கிய நோக்கமாகும். ஓமானின் 50-50 கூட்டுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஈரான் நிராகரித்ததற்கு, அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒரு கப்பல் போக்குவரத்துப் பாதை ஈரானின் கண்காணிப்பிற்கு வெளியே சென்றுவிடும் என்பதே பிரதான காரணமாகும்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பதை விட, இந்த முக்கியமான கடல் பகுதியில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ரீதியிலான முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்துவதே ஈரானின் திட்டமாகும்.
வொஷிங்டனின் தலையீடு இன்றி வளைகுடா நாடுகளுடன் தனிப்பட்ட புரிதலை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மோதல் மற்றும் நெருக்கடியைப் பயன்படுத்தித் தனது பலத்தை படிப்படியாக உயர்த்தவும் ஈரான் முயற்சித்து வருகிறது.