அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : புயலாக மாறும் தாழமுக்கம்
கடந்த 17.09.2026 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்
இது நாளை(24.09.2026) அதிகாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளுக்கு இடையே கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 25.09.2024 வரை இலங்கையின் மத்திய, மேற்கு, சப்ரகமுவா, தெற்கு, மாகாணங்கள் மற்றும் வடமேற்கு ( குருநாகல்) கனமழை முதல் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்றும்(23.09.2026) நாளையும் ( 24.09.2026) நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, குருநாகல், மாத்தறை, கம்பகா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதனாலும், மகாவலி உள்ளிட்ட ஆறுகளின் நீர் மட்டம் மிக உயர்வாகவும் உள்ளமையினாலும் நாளையும் நாளை மறுதினமும் கிடைக்கும் கனமழை மேற்கூறிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
எனவே கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, குருநாகல், மாவட்டத்திலுள்ள மக்கள் எதிர்வரும் 25.09.2026 வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஊடாக வரண்ட காற்றை ஈர்ப்பதனால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் சற்று அதிகமாகக் காணப்படும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 27.09.2026 வரை மழையற்ற வானிலை நிலவும்.
மீண்டும் எதிர்வரும் 27.09.2026 முதல் 30.09.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகள் வெப்பச் சலன மழையைப் பெறும்.
பின்னர் 01.10.2026 முதல் 07.10. 2026 வரை மிகக் குறைவான அளவு மழையே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.