கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! வெளியான விமர்சனம்
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை(22) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் ஆட்சி காலத்தில் 715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி
தமிழரின் வரலாறு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து மக்களுக்கும், மிக நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத் தலமாகும். இப்பகுதியை புனித இடமாகவும் தமிழ் மக்கள் பல தலைமுறைகளாகக் கருதி வந்துள்ளனர் வருகின்றனர்.

இந்நிலையில், புனித பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடையே பதற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல அது திருகோணமலையின் வரலாறு தமிழர் பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு முக்கிய தமிழர் மரபுரிமைச் சின்னமாகும்.
உடனடியாக நிறுத்துங்கள்
இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவர் மேலும் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள் குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை 2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அந்த இடத்தில் எந்தச் சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.