நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலையாக சில ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை
மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய கூட்டமொன்று தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இவர்கள் நாளை(23.07.2026) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம்
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நடத்திய கூட்டம் பற்றி செய்தி வெளியிட்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில், சிங்கள சேவை ஒன்றின் ஊடகவியலாளர்கள் நாளை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஜூன் 5ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

அது தொடர்பான செய்தி வெளியிட்டமை குறித்தே இந்த ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஒரு அதிகாரப்பூர்வ சட்டரீதியான குழு அல்லாத சூழலில், இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களை சிறப்புரிமைகள் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பது, மக்களின் தகவல் அறியும் உரிமையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஊடக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.