தடுப்பூசியை விரைவில் நம் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - இராணுவத் தளபதி
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புக்காக தற்போது உலகில் தயாரிக்கப்பட்டுள்ள ஊசி மருந்துகளில் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான ஊசி மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிடம் 192 நாடுகள் இந்த ஊசி மருந்தை கோரியுள்ளன. இலங்கை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் அந்த ஊசி மருந்தை இலங்கைக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இன்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அன்பளிப்பாக இந்த ஊசி மருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எப்படியான விலையாக இருந்தாலும் பணத்தை செலுத்தி இந்த ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள வைரஸை விட 70 மடங்கு வேகமாக பரவக் கூடியது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் நாட்டு மக்களின் பெரும்பலானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது.
எனினும் சிலர் சுகாதார பரிந்துரைகளுக்கு முரணாக செயற்பட்டு நாட்டை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர்.
தேவையின்றி மேல் மாகாணத்தில் இருந்து வெளியில் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் பொறுப்பின்றி செயற்படுகின்றனர் எனவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.