புனித வெள்ளியை முன்னிட்டு தமிழர் பகுதியில் சிலுவைப்பாதை வழிபாடுகள்
உலக வாழ். கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று(03.04.2026) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
இதேவேளை, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித வெள்ளி வழிபாடு
புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக கொண்டு செல்லப்பட்டதுடன், ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப்பாதை ஊர்வலமாக சென்று நகரின் பிரதான வீதிகளுடாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது, தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இயேசு ஆண்டவரின் நினைவில் இருந்து வாழ்க்கையில் கைப்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஜெப வழிபாடுகளும் பக்திபூர்வமாக இடம்பெற்றன.

திருகோணமலை
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மனித குலத்தின் பாவங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்த தினமான பெரிய வெள்ளி இன்று (03) மிகுந்த பக்தியுடனும், துக்கத்துடனும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தில் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்வு இன்று காலை மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த சிலுவைப் பாதை நிகழ்வில், மூதூர் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கண்ணீருடனும், பிரார்த்தனையுடனும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கியாஸ் ஷாஃபி
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (03.04.226) களுவாஞ்சிகுடி அன்னை தெரேசா ஆலயத்தில் இருந்து களுவாஞ்சிகுடி, களுதாவளை தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.

மேலதிக தகவல் - குமார்