சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழர் தரப்பிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: வேந்தன் இரங்கல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழர் அரசியல் பரப்பிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், தேசிய அபிலாஷைகள் மற்றும் விடுதலைக்கான குரலாக நீண்டகாலம் அரசியல் பரப்பில் பயணித்தவர் சிவாஜிலிங்கம்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், தேசிய இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காகவும் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர்.
தமிழ் மக்களின் உரிமை
பல்வேறு அரசியல் நெருக்கடிகள், சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று தமிழ் மக்களின் உரிமைக் குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்தவர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் எடுத்துரைப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை.
குறிப்பாக, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் போராட்ட உணர்வு ஆகியவை தனித்துவமானவை.
பேரிழப்பு
அவரது மறைவு ஒரு தனிமனிதரின் இழப்பு மாத்திரமல்ல, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் நீண்டகாலமாக ஒலித்துவந்த ஓர் உரிமைக் குரலின் இழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் தோழர்கள் மற்றும் தமிழ் மக்களுடன் தாமும் துயரைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.