முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் தோற்கவில்லை..! நினைவுநாளை முன்னிட்டு வெளியான அறிக்கை
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத் தமிழர்களாகிய நாம் தோற்றுவிட்டோம் என எம்மிற் சிலர் கருதினாலும் சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசு இன்று வரை அவ்வாறு நம்பவில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுதாவது,
மிழ் மக்களாகிய நாம் எதிர்கொண்டு வருகின்ற தமிழ் இன அழிப்பை உணர முடியாதவர்களாக மாறி தம்மீதான தமிழ் இன அழிப்பு வரலாற்றையும் அதை நிகழ்த்தி வருபவர்கள் யாரென்பதையும் மறந்து, எங்களது பாதுகாப்பரணாக நிற்கின்ற தமிழ்த் தேசிய உணர்வை ஈற்றில் கணிசமானவர்கள் இழந்து போகும்போது சிங்கள - பௌத்த மேலாதிக்கத்தை நிபந்தனையற்று ஏற்று இலங்கையர்கள என்ற ஆக்கிரமிப்பு அடையாளத்தினுள் கரைந்து அடையாளமற்றவர்களாக மாறும் அளவுக்கு நமது இனம் தரமிழக்கும் போது தான் தமிழர்களின் இறுதித் தோல்வி, அல்லது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் உண்மையான இறுதி வெற்றி என்பது தமக்குக் கிடைக்கும் என்பதில் இலங்கை அரசு தெளிவாகவே உள்ளது.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, எங்களது தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் தத்தமது இறைமைகளை ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இழந்தனர்.
1948ஆம் ஆண்டு “சுதந்திரம் வழங்கப்பட்டது” எனக் கூறப்பட்டாலும், அது எமது தமிழ்த் தேசத்திற்கு உண்மையான விடுதலையாக அமையவில்லை.
ஆங்கிலேய அரசின் குறைபாடுள்ள காலனித்துவ நீக்கற் கொள்கையினால் எங்கள் தேசத்தின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, தமிழ் மக்களின் இறைமை எமது சம்மதமின்றியே அடாத்தாக சிங்கள - பௌத்த பெரும்பான்மை அரசுக் கட்டமைப்பிற்குள் கைமாற்றப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.