ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற கடும் போட்டி:அரசாங்கத்துடன் இணையும் சுதந்திரக் கட்சியின் மேலும் நால்வர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வார்கள் என தெரியவருகிறது.
இதனையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியினரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கும்.அரசாங்கத்தில் இணைவது சம்பந்தமாக அவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் விளக்கமளிக்க தீர்மானித்துள்ளனர்.
மைத்திரியை தவிர அனைவரும் அரசாங்கத்தில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எஞ்சியுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட பின்னர், அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் எதுவும் நடத்தப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலைமை காரணமாக கட்சிக்கு மேலும் வலுவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சு பதவிகளுக்கு கடும் போட்டி
இதனிடையே ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
20 முதல் 25 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை 40 வரை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சி இருக்கும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர ஏனைய நான்கு பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
ராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்படும் போது போட்டியான நிலைமை ஏற்பட்டதுடன் அமைச்சு பதவிகள் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.