தற்போதைய மாணவ சமூகம் சுய கல்வி கற்கையை இழந்து விட்டது: அருட்சகோதரர் சந்தியாகு
தற்போதைய மாணவ சமூகம் சுய கல்வி கற்கின்ற தன்மையை இழந்து வருகின்றனர் என மன்னார்(Mannar) புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகள் தொடர்பாக தனது பாடசாலை நிலைப்பாடு குறித்து நேற்று (01.06.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் விஞ்ஞானத் துறை ,கணித துறை ,வணிகத்துறை , கலைத்துறை, மற்றும் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகள் காணப்படுகின்றது.
தற்போது வெளியாகி உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியானது மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கும், மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் மற்றும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.
கணிதத்துறையை பொறுத்த மட்டில் எமது கல்லூரி மாணவன் பிரேந்திரகுமார் வானுஜன்( 3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும், உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவன் நெதானியேல் திர்ஸானன் (3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அனைத்து துறைகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் சுமார் 30 பேர் வரை சகல துறைகளிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |