இலங்கை அபாயகரமான சூழலை நோக்கி நகரும்! சிறீதரன் அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை (Video)
இலங்கை அபாயகரமான சூழலை நோக்கி நகரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நேற்று (21.09.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினை பௌத்த பேரினவாதம் ஆக்கிரமித்து நீதிமன்ற கட்டளையினை மீறி பாரிய விகாரை அமைக்கும் பணியினை தமிழ் மக்கள் எதிர்கின்றார்கள்.
பிரித்தாளும் கைங்கரியம்
பல நாட்களாக தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் இணைப்பு பகுதிகளை பிரித்தாளும் கைங்கரியம் குருந்தூர் மலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எம்.ஏ.சுமந்திரனால் முன்னெடுக்கப்பட்ட வழக்கில் இந்த இடங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்ற கட்டளை இருக்கின்றது. இலங்கையில் நீதிமன்றங்கள் செயலிழந்துபோய் இருக்கின்றது.
நீதிமன்றத்தின் கட்டளை வலுவற்றதா என கேள்வி
நீதிமன்ற கட்டளையினை மீறி பௌத்த பிக்குவும், தொல்பொருள் திணைக்களமும் அடாத்தாக செய்ய முடியுமா அப்படி என்றால் நீதிமன்றத்தின் கட்டளை என்பது இந்த நாட்டில் வலுவற்றதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீதிமன்றங்களுக்கும் நீதிக்கும் இடமில்லாத முறையில் அடத்தாக இந்த இடங்களை பிடித்து சிங்கள ஆக்கிரமிப்பு செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு நாங்கள் ஒரு எச்சரிக்கையினை முன்வைக்கின்றோம், இவ்வாறான நடவடிக்கையினை கைவிட்டு தமிழர்களின் நிலங்களை பறிக்கும் வேலையினை கைவிடுங்கள் இல்லை என்றால் ஒரு அபாயகரமான சூழலை நோக்கி இலங்கை நகரும் என்பதுதான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.