சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்றார்கள்! சட்டத்தரணி சுகாஷ் ஆதங்கம் (Video)
தமிழர்களினுடைய வாழ்விடங்களில் திட்டமிட்டு அவர்களின் இன அடையாளங்களை அழித்து, சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்ற, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினுடைய பாகம், தொடர்ந்தும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று (21.09.2022) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினுடைய கட்டளையை மீறி குருந்தூர் ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு கொண்டிருப்பதாக பொது மக்களுடைய முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து மக்கள் படையை திரட்டிக்கொண்டு இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறோம்.
மக்கள் கூறியது உண்மை
பொது மக்கள் கூறியது அனைத்துமே உண்மை. நீதிமன்றத்தினுடைய கட்டளையை மீறி விகாரை கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அதை அனைவருமே பார்க்க முடியும். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினுடைய ஒரு பாகமாகத்தான் இதை நாங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது.
தமிழர்களினுடைய வாழ்விடங்களில் திட்டமிட்டு தமிழ் மக்களினுடைய இன அடையாளங்களை அழித்து, சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்ற, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினுடைய பாகம், தொடர்ந்தும் அரங்கேறிக் கொண்டிருப்பதை இந்த விடயம் மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை
ஆகவே ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தை தீவிரமாக பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்.
ஈழத்திலே அரங்கேறிய இனப்படுகொலை விவகாரத்தை வெறுமனே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் முடக்கி வைத்திருப்பது என்பது இத்தகைய அநீதிகள் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் தொடரவே வழிவகுக்கும்.
ஆகவே இலங்கையிலே அரங்கேறிய இனப்படுகொலைக்கான நீதியை காணுகின்ற விவகாரம் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி பாரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.
நீதிமன்றத்தினுடைய கட்டளையை மீறி சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கான ஆதாரத்தை நாங்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கஜி
![Gallery](https://cdn.ibcstack.com/article/200eaa8c-088a-4340-a08e-6ec90fd36069/22-632bcd73752cd.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/fb9acdee-2814-4f73-8f5d-1b4a3c2df0b1/22-632bcd73c4759.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0014926e-95af-4c17-af12-850762c25239/22-632bcd741a4ff.webp)