நிலங்களை ஆக்கிரமித்து வளங்களைக் கொள்ளையிடும் பேரினவாத அரசாங்கம்: சிறீதரன் (Photos)
எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும் நாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து எங்களை வெளியேற்றி அங்குள்ள வளங்களை கொள்ளையிடுவதையும் பேரினவாத அரசாங்கம் தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பொன்னாவெளி பிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் அகழ்வு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சுண்ணக்கல் அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (17.03.2023) வேரவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பொன்னாவெளி என்ற பிரதேசமானது எங்கள் மூதாதையர்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஏதோ விதத்தில் அறிந்தது போல் குறித்த பெயர் கொண்டு அழைத்துள்ளார்கள்.
அதேபோல வேரவில் பிரதேசம் ஈழவூர் என்றும் அப்போது அழைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது புளியந்தரை போன்ற பழம்பெரும் கிராமங்களும் இருக்கின்றன.
இந்த பிரதேசத்தில் இருக்கின்ற வளங்களை கொள்ளை அடிப்பதற்கு இது போன்ற பல முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.
யுத்தம் நடந்த போது விடுதலைப் புலிகள் எங்களையும் எமது நிலங்களையும் பாதுகாத்தார்கள், இங்குள்ள வளங்களும் பாதுகாப்பாக இருந்தது, நாங்களும் மனிதர்களாக இந்த மண்ணிலே வாழ்ந்தோம்.
இப்போது திருகோணமலை முல்லைத்தீவு குச்சவெளி பகுதியிலே 36 இடங்களிலே விகாரைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதை விட மயிலிட்டியில் தனியார் காணி ஆக்கிரமித்து அங்கே விகாரை அமைக்கப்பட்டு இருக்கின்றது.
நாவற்குழியில் மெருகூட்டி இருக்கின்ற விகாரைக்கு இராணுவ தளபதி சவேந்திர சில்வா வருகிறார்.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை
இதேபோல இப்போது புதிய பிரச்சினை ஒன்று உருவெடுத்து இருக்கின்றது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு எங்கள் நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே நாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருக்கின்ற வளங்களை சுரண்டும் நோக்கில் அந்த மக்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்றுகின்ற வேலையையும் செய்து வருகின்றார்கள்.
நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற கட்சி நாங்கள் எங்களது மக்களுடைய விருப்புகளுக்கு மாறாக செயற்பட்டதில்லை. பாரம்பரியமாக வாழ்ந்த எங்களது பூர்வீக நிலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது.
பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் யாழ். பல்கலைக்கழகமும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற
கலந்துரையாடலில் பூநகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம் பிள்ளை மற்றும்
ஆசிரியர்கள், வேரவில் கிராஞ்சி பொன்னாவெளி ஆகிய கிராமங்களின் பொது
அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.