கிளிநொச்சி பொதுநூலகக் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் சிறீதரன் எம்.பி.கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறை வளர்ச்சியில் முழுமையான பங்களிப்பை வழங்கக்கூடியதும் இந்த மாவட்டத்தின் அடையாளமாக மிளிரக்கூடியதுமான கிளிநொச்சி மாவட்ட பொதுநூலகத்துக்குரிய காணியை இராணுவத்தினரிடமிருந்து முழுமையாக விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் எழுத்துமூலக் கோரிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த எழுத்துமூல கோரிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
“இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுள், இதுவரை கட்டமைக்கப்பட்ட நகர வடிவமைப்பொன்றைக் கொண்டிராத மாவட்டமான கிளிநொச்சியில், மாவட்டச் செயலகத்தை மையமாகக் கொண்டு புதிய நகர மையத்தை உருவாக்குவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், அத்தகைய நகர வடிவமைப்புடன் தொடர்புபட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டுத் தேவைகளுக்கான காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை அதிகூடிய நிருவாக மற்றும் திட்டமிடல் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு
உட்பட்ட கிளிநொச்சி நகர பொதுநூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம்
என்பவற்றுக்க்குச் சொந்தமாக இருந்த 13.5 ஏக்கர் காணி போருக்குப் பின்னர்
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இக்காணியில் 9 பரப்பு காணி பொது
நூலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 வருட கால
போராட்டத்தின் விளைவாக அதில் 5 பரப்புக் காணி மட்டுமே தற்போது
விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொதுநூலகத்தை இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட அக்குறுகிய நிலப்பரப்புக்குள்ளேயே அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்புடைய தரப்பினரின் திட்டமிடலிலும், செயற்பாடுகளிலும் பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது.
அதேவேளை இலங்கையில் வேறெங்கும் இல்லாத வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொது நூலகம் கடந்த 13 வருடங்களாக வாடகைக் கட்டடம் ஒன்றில் இயங்கிவருகிறது என்பதையும் தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்பாட்டு அடையாளமாக, அதன் தோற்றத்திலும், இயங்குதிறனிலும் யாழ்ப்பாண நூலகம் எப்படி மிளிர்கிறதோ, அதே அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பொதுநூலகம் ஒன்றை நிறுவ வேண்டுமென்பது கல்விப் புலத்தினரின் நீண்டகாலப் பேரவா ஆகும்.
கிட்டத்தட்ட நான்கு வருடகால பிரயத்தனங்களின் மத்தியில், கரைச்சிப் பிரதேச சபையின் நிலையான வைப்பிலுள்ள நிதியைப்பெற்று, புதிய நூலகத்தை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
மரபியல் அடையாளங்களுடன் கூடிய பிரதான நுழைவாயில், சரஸ்வதி சிலையும் முற்றமும், நவீன வசதிகளுக்குட்பட்ட நூல்நிலையம், இணையவழி நூலகம், படிப்பகம், கேட்போர்கூடம், கணினி அறை, பூங்கா, வாகனத் தரிப்பிடம் உள்ளிட்ட துணைக் கட்டமைப்புகளுடன் இணைந்ததாக, மன அமைதியையும், வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தூண்டத்தக்க புறச்சூழல் அமைப்புகளுடன் கூடிய பொதுநூலக கட்டடத் தொகுதியை புதிதாக நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் கைகூடியுள்ள போதும், நூலக அமைவிடத்திற்கான காணி முழுமையாக விடுவிக்கப்படாமலுள்ளதால், இவ் வேலைத்திட்டங்களை முழுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்காணி விடுவிப்புத் தொடர்பில், காலத்துக்குக்காலம் மாற்றம்பெறும் ஒவ்வொரு அரசாங்களின் ஆட்சிக்காலங்களிலும் ஜனாதிபதி, பிரதமர், தொடர்புடைய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் சாதகமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இக்காணியை முழுமையாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் . என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
