செம்மணி புதைகுழி மற்றும் ஈஸ்டர் தாக்குதல்! அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்கும் ஸ்ரீநேசன் எம்.பி
இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று(21.06.2026) மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கின்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணையாகும்.
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின்போது பாரிய மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை அவதானிக்க முடிகின்றது.

இந்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்கின்ற ஆர்வம் மக்கள் மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், காணப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகிய மூன்று ஜனாதிபதிகள் இருந்திருக்கின்றார்கள்.
அவர்களுடைய காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான உண்மைகளை கண்டறிய முடியவில்லை அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான உண்மைகள் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
விசாரணைகள் தொடர்பிலான நம்பிக்கை
குறிப்பாக, கோடாபய ராஜபக்ச ஆட்சிக்கு வரும்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து சூத்திரதாரிகளும் உண்மைக்கு மத்தியில் கொண்டுவரப்படுவார்கள் என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
அதேவேளை தற்போதைய நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் விசாரணைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விசாரணை பற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.
பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை, பாதர் காமினி சிறில் போன்றவர்களும் இது சம்பந்தமான நம்பிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மனிதாபிமானத்தை நேசிக்கின்றவர்கள் மனித உரிமைகளை போசிக்கின்றவர்கள் மத்தியில் இந்த விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.
குற்றவாளிக்கான தண்டனை
எனவே குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடிய எந்தவித சந்தர்ப்பங்களும் வழங்கக் கூடாது. ஆனால் தற்போது குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில அடிப்படைவாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உளவுத் துறை பிரதானியாக இருந்த சுரேஷ் சலே மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரே இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என்கின்ற பல விடயங்கள் பல மட்டங்களில் பேசப்படுகின்றன.

குற்றம் இழைத்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பேரினவாதிகள் பாதுகாப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நேரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவித்த குற்ற செயல்களை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது உறுதியான நிலைப்பாடு.
இன அழிப்பிற்கான சான்றுகள்
இதற்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகளாக இருக்கின்ற அனைவரும் தாக்குதல் சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்குரிய விதத்தில் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.
செம்மணி சித்துபாத்தியில் இதுவரையும் 386 என்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த புதைகுழியில் இருந்து பல வயது வித்தியாசங்களுக்குட்பட்டவர்களின் என்பு கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புத்தகப் பைகள், பாற்புட்டிகள் போன்ற ஆதார பொருட்களும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இது ஒரு இன அழிப்பிற்கான சான்றாக அமைகின்றன. குடும்பம் குடும்பமாக கொண்டு சென்று கொலை செய்திருக்கின்றார்கள்.
சாட்சியங்களாக மாறுகின்ற என்புக் கூடுகள்
தமிழர் தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகள் பலரை தேடிக் கொண்டிருக்கும் போது, தற்போது வெளிவந்துக் கொண்டிருக்கும் செம்மணி புதைகுழி என்புக் கூடுகள் அவற்றின் சாட்சியங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இது மாத்திரமல்ல, இன்னும் இந்த நாட்டில் பல புதைகுழிகள் காணப்படுகின்றன. இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.
கிருஷாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியான தற்போது ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் சோமரட்ண ராஜபக்ச என்பவர் செம்மணி புதைகுழி தொடர்பில் பல்வேறு விபரங்களை வெளிக்கொணர்நதுள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் 600இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனவே அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் செம்மணி போன்ற விடயங்களில் கையாளுகின்ற விதத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் குற்றவாளிகள் தப்பித்துச் செல்லக்கூடாது. குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சிலர் தற்போது பல தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam