சிறீதரன் பதவி விலகுவாரா..! சிறிநேசன் எம்.பி கேள்வி
அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலகுவாரா என சிறிநேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று(17.01.2026) போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டடை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர். இவர், அரசியலமைப்பு பேரவையில் பல கட்சிகள் வாக்களித்ததன் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்.
சிவஞானம் சிறீதரன் எம்.பி
தற்போது அவர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என கடிதம் அனுப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு இந்த கட்சி மூலமாக அந்தப் பதவி வழங்கப்படவில்லை.மாறாக, 21 உறுப்பினர்கள் வாக்களித்து தான் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு அதில் 11வாக்குகள் கிடைத்திருந்தன.
அவருக்கு பதவி விலகுமாறு கடிதம் அனுப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூட விருக்கிறது. அப்போது அவருடன் கலந்துரையாடிய இது தொடர்பில் நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் காரணமாக தேர்வு செய்யப்பட்ட பதவி. அந்த விடயத்தில் அவர் அதனையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறேன். அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் இருக்கின்றார்.
இந்த விடயத்தை அரசியலமைப்பு பேரவை ஏதாவது நிர்பந்தங்கள் உள்ளாக்கப்படுகின்றன அல்லது நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயத்தையும் சபாநாயகருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம். எனவே, நெருகல்கள் மற்றும் நிர்பந்தங்கள் தனிப்பட்ட முறையில் சிறிதரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடம்பெறக்கூடிய நிலை இருந்தாலும், அரசியலமைப்பு பேரவை சுயாதீனமாக செயல்படுகின்ற குழுவாக இருக்கின்றது.
அது முக்கியமான பதவிகளையும் நியமிக்கின்ற பொறுப்பையும் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில், இந்த விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு சட்டபூர்வமான ஆலோசனைகளும் பெறப்பட்டு தான் அவர் அந்த முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கின்றேன்.
அரியநேத்திரன் விலக்கப்பட்டாரா?
அதே போன்று, எமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் விடயம் தொடர்பாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போது தான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது.
பதில் பொதுச் செயலாளர் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடி, கடிதத்தை அனுப்பி இருக்கிறது.

அந்த கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே, அவர் இப்போது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்திருக்கின்றது. சங்கு சின்னத்தோடு செயற்பட்டிருந்தவர்கள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து செயல்படுவதாக நானும் ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன்.
தமிழ் மக்கள் சிதறி கிடக்காமல் அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அத்துடன், பிரஜாசக்தி என்ற போர்வையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

