பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வேலன் சுவாமிகள் அடையாள உண்ணாவிரதம் (Video)
சிங்கள பௌத்த மக்களை காட்டுமிரண்டித்தனமாக பின்னால் இருந்து மாற்றும் சக்திகளை இந்த பேரினவாத அரசு கண்டும் காணாமல் இருந்து வருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக் கொல்வேன் என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும் போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை, கைது செய்யப்படவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் கடந்த 55 வது நாளாகவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தவத்திரு வேலன் சுவாமிகள் அடையாள உண்ணாவிரதமொன்றை மேற்கொண்டிருந்தார்.
தமிழர்கள் தாயகம்
நேற்று (08.11.2023) காலை தொடக்கம் மாலை வரையில் பண்ணையாளர்களுடன் போராட்டத்தில் இணைந்த அவர் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.
இந்த போராட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். நல்லிணக்கம் சமாதானத்தை பேசிக்கொண்டு சர்வதேசத்தில் நிதியை திரட்டிக்கொண்டு இங்கு இங்கு தமிழர்கள் தாயகத்தினை கபளீகரம் செய்கின்ற, நில உரிமையினை பறிக்கின்ற, தங்களது வருமானத்தை ஈட்டுகின்ற உரிமையினை பறிக்கின்ற செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகளை அமைத்தல், நிலங்களை அபகரித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் ஊடாக தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்து இந்த நாடு பௌத்த நாடு என்பதை இந்த நாடு நிரூபித்து நிற்கின்றது.
எந்தவொரு நாடு எந்த கொள்கையில் பயணிக்கின்றதோ அதன் விளைவுகள் தான் அங்கே அடிமட்டத்தில் வெளிப்படுத்தி நிற்கின்றது.
பாதுகாப்பு படையினர்
திணைக்களங்கள் மகாவலி அபிவிருத்தி சபையாகட்டும் அனைத்து கட்டமைப்புகளும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினாலேயே இயக்கப்படுகின்றன. இவற்றின் பேரிலேயெ அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. இதற்கு அவர்களுக்கு பக்கபலமாக பாதுகாப்பு படையினர் இரவுபகலாக இணைந்திருக்கின்றனர்.
நீதியை நிலைநாட்டவேண்டிய பொலிஸார் நீதிக்கு விரோமாக நடக்கின்றனர். சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக்கொல்வேன் என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும் போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை,கைதுசெய்யப்படவுமில்லை.
ஆனால் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அமைதியான முறையிலே கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்ககூடிய சூழ்நிலையிலே அவர்களை வீதியில் வழிமறித்து அடாவடியாக இலங்கை பொலிஸார் ஒரு பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.
அத்துமீறிய குடியேற்றவாசிகள்
தெற்கிலே ஒரு நீதி வடகிழக்கிலே ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி,தமிழர்களுக்கு ஓரு நீதி என்பது வெளிப்படையாக இந்த நாட்டை துண்டாடியுள்ளது. இந்த விதத்தில் நாங்கள் இவற்றினை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. இந்த மக்கள் 55 நாட்களாக வீதியில் போராடிவருகின்றனர்.
அவர்கள் பரம்பரையாக ஆண்டுவந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும். மயிலத்தடு, மாதவனையில் அத்துமீறி குடியேறியுள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் உடனடியாக அகற்றப்படவேண்டும். பௌத்தமயமாக்கல் வடகிழக்கில்முற்றாக நிறுத்தப்படவேண்டும்.நில அபகரிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் ஈழ தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும்.
இந்த போராட்டத்தில் கொழும்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் இஎஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |