பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் செல்ல முயற்சித்தபோது பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே அந்நாட்டு இராணுவத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த (07.10.2023) ஆம் திகதி பெலாரஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் கூறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்றுள்ளார்.
இதன்போது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து உதவி செய்ய யாரும் இல்லாத பட்சத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You May like this