ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
மத்திய நிர்வாகக் குழுவின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எட்டு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த கட்சி தலைமைத்துவம் தீர்மானித்துள்ளது.
அமைச்சு பதவிகளை ஏற்றவர்கள்
தற்போதுள்ள அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையும் ஏற்காமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருந்தது.

குறித்த தீர்மானத்திற்கு முரணாக நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றதுடன் அதன் பின்னர் ரஞ்சித் சியம்பலாபிடிய, சாமர சம்பத் தசநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சாந்த பண்டார ஆகியோர் இராஜாங்க அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
எவ்வாறாயினும் கட்சி தலைவருக்கு காணப்படும் அதிகாரத்திற்கு அமைவாக எதிர்வரும் நாட்களில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் ரோஹன லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
வழக்குத் தாக்கல்
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சு பதவியொன்றை ஏற்றவுடன் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
