நினோ நிலை ஏற்பட்டால் நிலைமை மோசமடையும் ..! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென்மேற்கு பருவமழையின் போது எல் நினோ நிலை ஏற்பட்டால், செப்டெம்பர் மாதம் வரை வறட்சிக் காலம் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே,
வறட்சியான காலநிலை
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டெம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும்.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் அனைத்து நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் முறையான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது நிலவும் வெப்பமான சூழல் இந்த மாதம் முழுவதும் தொடரும் என்றும், இதேவேளை, அடுத்த மாதம் சுமார் 2 முதல் 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்குப் பருவமழை சுமார் 20 ஆம் திகதி தொடங்கும். தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், இந்த வெப்பம் சற்றுக்குறையும். தற்போது நிலவும் கடுமையான வெப்பம் மே மாதத்தின் 3வது வாரத்திற்கு பிறகு பெருமளவில் தணியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தத் தென்மேற்குப் பருவமழையின் போது எல் நினோ நிலை ஏற்பட்டால், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மழை செப்டெம்பர் வரை குறையும்.
எனவே, அனைத்துத்துறைகளிலும் குடிநீர் மற்றும் நீர்பாசனத்திற்கான நீரை நிர்வகிக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் நாம் அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.