நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடுமையான மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய,மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும்,தென்மேற்கு கடற்பகுதியிலும் மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்,மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் பலத்த மழையுடனான காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,மலை பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும்,வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும்,மீனவர்கள் எதிர்வுகூறல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.